News Home     Site Home

சேலத்தில் திருநங்கையர் குறும்படவிழா (டிசம்பர் 13-14)

Transgender-short-film-festival-salem

காலங்காலமாக நம்முடனேயே பயணித்து வந்தாலும் நம்மால் கண்டுணரப்படாமலும்,கண்டும் விலகி ஒடுகிற ஒரு சமூகமாகத்தான் திருநங்கையர் நமக்கு பரிச்சயம். சாதி,சமய,இன ,மொழி வேறுபாடின்றி அனைத்து தரப்பினாலேயும் இவர்கள் பொது சமூகத்தின் மையநீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கண் முன் காணும் நிதர்சனம்.

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக திருநங்கைகள்,முற்போக்குவாதிகள்,சமூக சீர்திருத்த கருத்துடையோர் என பொதுதளத்தின் செயல்பாட்டாளர்களின் சீரிய முயற்சிகளால் இச்சமூகம் இன்று கலைத்துறை,எழுத்து, காட்சி ஊடகம், சமூகப்பணி என தன் எல்லைகளை விரித்துவருகிறது. ஆயினும் முழு அங்கீகாரம் கிடைக்காத நிலையில் இச்சமூகத்தின் பெரும்பான்மையினோர் கடைகளில் கையேந்தியும்,கடைச்சரக்காகியும் தான்
வாழ்வை கழிக்கின்றனர்.

இந்த இருள் வாழ்விற்கு பொதுசமூகமும் மௌனமான சாட்சியாய் இன்னும் இருப்பதுதான் வேதனை.ஆயினும் பல திருநங்கைகள் தங்கள் தொடர் போராட்டங்களால் சமூகத்தின் மௌனத்தை உடைக்க துவங்கியுள்ளனர்.திருநங்கையர் சமூகத்தின் இந்த இழிநிலைக்கு ஊடகங்களின் பங்கை ஒதுக்கிவிட முடியாது. “ஊரோரம் புளியமரம், கொக்கரகோழி கூவுற வேலையிலே,ஒம்போது …”என ஒவ்வாத காட்சிகளால் தங்கள் பங்கிற்கு இச் சமூகத்தின் முகங்களுக்கு முகமூடி மாட்டி அழகு பார்த்தது.

இந்நிலையில் சில மாற்றுஊடகங்கள் திருநங்கைகளின் அர்த்தமான வாழ்வியல் கூறுகளை, வலிகள் நிறைந்த வாழக்கை பாதையை,பொதுசமூகம் கண்டிராத சமூக கட்டமைப்புகளை,காயங்கள் வழியும் காதலை, நாம் கேட்டும், ,கண்டிராத போரட்டங்களை,வெற்றிகளை,அவைகள் தந்த வடுக்களை என அனைத்தையும் அப்பட்டமாய் உள்ளது உள்ளபடியே படம் பிடித்துள்ளன. இவைகளை சமூகத்தின் கண்களுக்கு
காட்சிப்படுத்த வேண்டிய சூழலை நாம்கொண்டுள்ளோம்.“*அன்பின் வழியது உயிர்நிலை**” *உயரிய கருப்பொருளை கைகொண்டு கடந்த ஆகஸ்ட் 9,10 -2013 அன்று எங்கள் திருநங்கையர் குறும்பட பயணத்தினை மதுரை மண்ணில் துவக்கினோம்.கிட்டதட்ட 15 குறுபடங்கள்,ஆழமான கருத்துரைகள்,நேர்த்தியான விவாதங்களோடு நிறைவாக நடந்தது.

நிகழ்வின் இரண்டாம் பயணம் நம் சேலம் மாநகரில் வருகிற டிசம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் நடைப்பெறவுள்ளது.திருநங்கைகள் குறித்த ஆழமான புரிதலை,அவர்களின் தனித்து விடப்பட்ட உணர்வுகளை,விடியலை நோக்கிய அவர்களின் பயணங்களை பொதுசமூகத்தில் பகிர்ந்துக்கொள்ள ஏதுவான இந்நிகழ்வை சாத்தியப்படுத்த சமூக ஆர்வலராய், முற்போக்கு சிந்தனை மேல்தாங்கியிருக்கும் தாங்களின் நிறைந்த அன்பையும்,இயன்ற பொருள் உதவியினையும் தந்து உதவுமாறு *“ நாடோடிகள் திரைப்பட சங்கம் – சேலம் மற்றும் பாரதிக்கண்ணம்மா அறக்கட்டளை – மதுரை ”* சார்பாக தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

சேர்ந்து நடப்போம்!! சேர்த்து நடப்போம்!!

மேலும் தொடர்புக்கு:  இமயபாலன்: 90250 63002 , பிரியாபாபு –8438907100

- சேலம் ஜில்லா.காம்

 

 

Share

Leave a Reply