News Home     Site Home

சேலத்தில் தமிழ் இசை கவிக்கு ஆராதனை !!!

இசை உலகிற்கு நம் தமிழகம் ,பழங்காலம் தொடங்கி பல கவிகளையும் , இசை வித்தகர்களையும் தந்துள்ளது . அன்றும் இன்றும் இசையும் இறைபற்றும்,கனியும் அதன் சுளையும் போல் இருந்தாலும் அதன் சுவை நம் தமிழே என்பதை யாரும் மறுக்க முடியாது. “பாலும் பசுந்தேனும் நான் தருவேன் ,சங்கத்தமிழ் மூன்றும் தா!!” என கேட்ட ஔவை முதல், “செந்திறத்த தமிழோசை” என திருமங்கையாழ்வார் தொடர பலரும் இறைவனையும் தன் தமிழ் மொழியையும் , கண்ணும் அதன் ஒளியும் ஒப்ப போற்றி வாழ்ந்தனர் . பிற்காலத்தில் உமறுபுலவரும் , வீரமாமுனிவரும் இதற்கு விதிவிலக்கில்லை.

அவர் அவர் தம் இறைவனை துதிக்க தமிழிசை பாடல்கள் பல இருந்தாலும்,இடையே சமஸ்க்ருதமும் , தெலுங்கும் கர்நாடக இசையில் பெரும்பங்கை கவர்ந்து நம் தமிழ் இறைபக்தி பாடல்களை மேகம் போற்றிய மேருவாய் செய்தது . இதற்கு பல அரசியல் காரணங்கள் இருந்தாலும் தமிழர்களாகிய நாம் நம் இறைவனை தமிழிசையால் உணர்வதே உன்னதம்.பொதுவாக தன் வாழ்வை இறைவனுக்காக சமர்பித்து பல பாமாலைகள் தொடுத்து இறைவனடி சேர்ந்த இறைகவிகளுக்கு ” ஆராதனை ” எனும் நிகழ்வு நடைபெறும். இதில் மிகவும் பிரபலம் திருவையாற்றில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தியாகராஜ சுவாமிகள் ஆராதனை .இதில் முக்கிய நிகழ்வாய் தெலுங்கு மற்றும் சமஸ்க்ருதத்தில் இயற்றபட்ட பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்படும் . காவிரி ஆற்றங்கரையில் இறைமனம் செழிக்கும் ஒரு அரிய தருணம் . ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய இசை வித்வான்கள் , பாடகர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் இசை நிகழ்வு இது.

இதே போல் ஆராதனை நிகழ்வு நம் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள ஆணையாம்பட்டி எனும் கிராமத்தில் ஆதிசேஷ ஐயர் என்று வாழ்ந்து 1975 ஆம் வருடம் சந்நியாசம் பெற்ற சுவாமி ஸ்ரீ குஹானந்த பாரதி சுவாமிகளின் ஆராதனை நிகழ்வு டிசம்பர் 5 ஆம் நாள் நடைபெற்றது. இதன் தனி சிறப்பு இவர் இயற்றிய பாடல்கள் அனைத்தும் தமிழ் பாடல்களே. .தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகபெருமானை தலைவனாய் கொண்டு இயற்றபெற்றது . இவர் இயற்றிய பாடல்கள் பல பழம்பெரும் புகழ் பெற்ற திரை பாடகர்களாகிய கே . பி .சுந்தராம்பாள் , மதுரை திரு. சோமு, பி.வி. ராமன், பி. வி.லக்ஷ்மணன் போன்ற ஜாம்பவான்களால் பாடபெற்றவை. மேலும் இவரது பாடல்களை ஜலதரங்க வித்வான்கள் ஆணையாம்பட்டி திரு.எஸ் தண்டபாணி, திரு எஸ். கணேசன் அவர்களால் இசைக்க பெற்றன. தன் வாழ்வில் அருணகிரிநாதர் பாடிய “திருபுகழ் ” பாடல்களுக்கு பந்தாதி இயற்றியுள்ளார் .இவர் பெயரில் ” சுவாமி குஹானந்தா திருபுகழ் சபா” நமது சேலம் மாநகரில் செயல்பட்டு வருகிறது . இவர் இயற்றிய பாடல்களில் ” என்ன கவி பாடினாலும்” இன்றைய இசை பாடகர்ளாகிய அருணா சாய்ராம், வித்யா அருண் போன்ற சிறந்த பாடகர்கள் பலர் பாடி புகழ் சேர்க்கிறார்கள் . இப்பாடலின் தொகுப்பை இணையத்தில் காணலாம்.

இந்த ஆராதனை நிகழ்வில் திருப்புகழ் இசை கலைஞர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு திருப்புகழ் பாடல்களையும், சுவாமிகள் இயற்றிய கீர்தனைகளையும் பாடி அவர் நினைவிடம் முன் மரியாதை செலுத்தினர் .காவடி , கும்மி,கோலாட்டம் போன்ற நிகழ்வுகளும் நடந்தன. ஆராதனை நிகழ்வு முழுதும் இசைத்தமிழ் இன்ப ஆறாய்ப் பெருக்கெடுத்தது என்பதில் ஐய்யமில்லை !!. இதே போல் நாமும் எந்த மரபவராய் இருந்தாலும் நம் இறைவனை நம் செம்மொழியாம் தமிழ்மொழியிலே அனுபவிக்கலாமே!!!

-கிருபாகரன் குணா

படங்கள்: ஐஸ்வர்யா ரவி

 

Share

Leave a Reply