பூ வாக்கு பெருமாள் கோவில்
- on 10.11.12
- தமிழ்
- No Comments
- Digg
- Del.icio.us
நம் தமிழர்களின் கலாச்சாரத்தில் மறுக்க முடியாத சக்தியாக கருதப்படுவது தெய்வசக்தி. இதையொட்டி நிறைய நம்பிக்கைகளும், மூட நம்பிக்கைகளும் அவரவர் வாழ்கின்ற பகுதியை பொறுத்து கடைபிடிக்கப்படுகின்றது. அவ்வகையான நம்பிக்கையில் ஒன்றுதான் வாக்கு சொல்வது அல்லது குறி சொல்வது என்பது. ஒரு மனித உடலில் இறைவன் இறங்கி சொல்லவதை வாக்கு சொல்வது என்று கூறுவார்கள். ஆனால் சேலத்தில் ஒரு கோவிலில் வித்யாசமான ஒரு நம்பிக்கை! இறைவனே நேரடியாக பூக்களின் மூலம் தங்களின் எதிர்கால வாழ்கையை வழி நடத்துகிறார் என்று சேலத்தின் ஒரு பகுதி மக்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர். அதற்க்கு முன்னதாக இக்கோவிலின் வரலாற்றினை நாம் பார்ப்போம்.
கோவில் அமைவிடம் : -
சேலம் நகரத்தின், கொண்டலாம்பட்டிக்கு அருகில் அமைந்துள்ள நாட்டாமங்கலம் எனும் பகுதியில் ஒரு சிறிய மலை மீது ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இது பூ வாக்கு பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறது
ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவில் வரலாறு :-
1906 ஆம் ஆண்டு சேலம் குகை பகுதியை சார்ந்த திரு. கே.ஆர்.டி. ரங்கசாமி செட்டியார் இக்கோவிலுக்கான மூலஸ்தான மண்டபத்தை அமைத்தார் என்றும், அவருக்கு கூட சுயம்புவாக பெருமாள் தோன்றிய ஆண்டும், வரலாறும் தெரியாது என்று இன்றும் இக்கோவிலை நிர்வாகித்துவரும் கே.ஆர்.டி. ரங்கசாமி செட்டியார் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அதன் பிறகு 1947 ஆம் ஆண்டு அந்த கோவிலின் முன்மண்டபம் அமைக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர். ஆங்கிலியர்களின் கால கட்டத்தில் இக்கோவில் பள்ளிக்கூடமாகவும் செயல்பட்டதாம்.
பூ வாக்கு என்பது என்ன? :-
சுயம்புவாக தோன்றிய பெருமாளின் தோள்களின் இரு புறமும் பூக்கள் வைக்கப்படுகிறது, பிறகு நம்முடைய கோரிக்கை பூசாரியின் மூலம் பெருமாளுக்கு வைக்கப்படுகிறது. பூசாரியும் நம்முடைய கோரிக்கையை சத்தமாக மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளிடம் கூறுகிறார். அதன் பிறகு வலது தோலின் மீதுள்ள பூ தரையில் விழுந்தால் அக் காரியம் நிறைவேறும் என்றும், இடது தோலின் மீதுள்ள பூ தரையில் விழுந்தால் நிறைவேறாது என்றும் கூறுகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களில் அநேகம் பேர் இப்படி பூ வாக்கு பெற்ற பிறகுதான் திருமண வரனை நிச்சயிக்கிறார்கள் .
தமிழர்களின் வாழ்க்கை இறை நம்பிக்கையோடு பின்னிபிணைந்தது என்பதற்கு இக் கோவில் ஒரு சிறந்த உதாரணம்…
- ஓபுளி ராஜ், சேலம்ஜில்லா.காம்
Leave a Reply